கரோனா கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்க அடிக்கடி கையைக் கழுவ வேண்டும், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி கொண்டு கைகளைக் கழுவ வேண்டும், கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என திரும்பத் திரும்ப அரசும் மருத்துவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சானிடைசர், முகக் கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடும், கூடுதல் விலைக்கும் விற்கப்படுகிறது.
கரோனா நோய் தாக்கத்தைக் கண்டு பயந்து பொதுமக்கள் உணவுப் பொருட்கள், கிருமி நாசினிகள், சானிடைசர்களை வாங்கி வீட்டில் சேமித்து வைக்கின்றனர். இதனால் சில வியாபாரிகள் இவற்றைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அவ்வாறு விற்றால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் பயந்துபோய் வீட்டில் கூடுதலாக உணவுப்பொருட்களை வாங்கி சேமித்து வந்த நிலையில், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (24) மற்றும் முஹமது நிஜாம் (24) என்ற இரண்டு இளைஞர்களுக்கு வேறு சிந்தனை தோன்றியுள்ளது. சானிடைசர்கள், முகக்கவசங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்துவிட்டால் பின்னர் கூடுதல் விலைக்கு விற்கலாம் என முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து ஆயிரக்கணக்கில் டப்பா டப்பாவாக கிருமி நாசினிகள், முகக் கவசங்களை வாங்கி பதுக்கிவிட்டனர். 144 தடை உத்தரவு வருவதற்கு முன்பாகவே மெடிக்கல் ஷாப்களில் மொத்தமாக சனிடைசர் மற்றும் முகக் கவசங்களை வாங்கி வைத்துள்ளனர். பின்னர் வாட்ஸ் அப் குழு மூலமாக சானிடைசர் மற்றும் முகக் கவசங்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதுகுறித்த ரகசியத் தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குச் சென்றது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கார்த்திகேயன் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில் விற்பனைக்கு வைத்திருந்த 250 சானிடைசர் பாட்டில்கள் மற்றும் முகக் கவசங்கள் சிக்கின. அவற்றைப் பறிமுதல் செய்த சுகாதாரத்துறை அதிகாரிகள், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் கார்த்திகேயனைக் கைது செய்த போலீஸார் அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது 1500-க்கும் அதிகமான சானிடைசர் பாட்டில்கள் மற்றும் மாஸ்க்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கார்த்திகேயனுடன் சேர்ந்து பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட அவரது நண்பர் முஹம்மது நிஜாமையும் கைது செய்தனர்.
கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பரான முஹம்மது நிஜாம் இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கரோனா தொற்று அவரவருக்கு பீதியைக் கிளப்பி சமுதாயத் தனிமையில் இருக்க கரோனா களேபரத்தைப் பயன்படுத்தி காசு பார்க்க நினைத்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.