திருநெல்வேலியில் தனிமைப்படுத்தப்பட்டவர் இல்லங்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும், தனிமைபடுத்தப்பட்டோர் இல்லங்களில் நில வேம்பு குடிநீர் வழங்கும் பணிகளும் நடைபெறுகின்றன.
இப்பணிகளையும், பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படுவதையும் ஆய்வு செய்த ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலகளிலிருந்து வந்துள்ள 2500 பேர் அவரவர் இல்லங்களில் தனிமைபடுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் இல்லங்களை விட்டு அன்றாட தேவை பொருட்களை வாங்க வெளியே வரக்கூடாது என்ற அடிப்படையில் வீட்டிற்கே சென்று பொருட்கள் வழங்கும் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
காய்கறிக் கடைகளும் தற்காலிகமாக பொதுமக்கள் நலன் கருதி இருப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ளன. இந்த காய்கறிக் கடைகளில் குறிப்பிட இடங்களில் நின்று காய்கறி பெற்றுக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் காலதாமமின்றி உடனடியாக அரசு மருத்துவமனையை அல்லது மாவட்ட அரசு கட்டுபாட்டு அறையை தொடர்பு கொள்ள வேண்டும்.
மத்திய ஆயுஷ் அமைச்சக அறிவுறுத்தலின்படி 14 நாட்கள் தொடர்ந்து நில வேம்பு குடிநீர் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அதன்படி தனிமைப்படுத்தப்பட்டோர் இல்லங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கும் பணி நடைபெறுகிறது.
மேலும் விபரங்களுக்கு 24 மணி நேரம் அவசர கட்டுபாட்டு அறை எண்.1077 அல்லது 0462-2501070 வாட்ஸ்ப் எண்: 6374013254, 6374001902 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகர நல அலுவலர் சதீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமும் 5 பேருக்கு பரிசோதனை:
இதனிடையே திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலுள்ள கரோனா சிறப்பு வார்டில் இதுவரை 26 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 19 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில் 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது. மீதமுள்ளோருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் 5 பேர் வரையில் அறிகுறிகளுடன் வருகிறார்கள். அவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்குவங்க பெண் மீட்பு:
மேற்கு வங்கத்திலிருந்து வந்து திருநெல்வேலியில் வீட்டு வேலை செய்து பிழைத்துவந்த பெண் ஒருவர் திருநெல்வேலியில் தனித்துவிடப்பட்டார். அவரிடம் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியவந்ததை அடுத்து அவர்களும் சென்று விசாரித்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அப்பெண் வி.எம். சத்திரத்திலுள்ள தனியார் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டார்.