சென்னை: கொரோனா வைரஸ் நோய் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் கொரோனா வைரசுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்தை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமூக பரவலை தடுப்பதற்காக அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்காமல் மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டு உள்ளனர். ஆரம்பக்கட்டத்தில் அவர்கள் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். தற்போது வேகமாக இந்த நோய் தொற்று பரவி வருகிறது. எனவே சமூக பரவலை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் தங்குவதற்கு தற்காலிகமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் வீடுகளுக்கு அனுப்பப்படாமல் அங்கேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி கூறியதாவது:-
ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் “டவர்- 3” பில்டிங்கில் கட்டாய சுழற்சி குடியிருப்பு உள்ளது. இங்கு 120 அறைகள் உள்ளன. இதில் டாக்டர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நர்சுகளுக்கு அருகே உள்ள குடியிருப்பில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்கு ஐந்து நாட்கள் வேலை. அடுத்த 5 நாட்களுக்கு ஓய்வு. ஓய்வு நாட்களில் அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளிட்ட அரசு மருத்துவ மனைகளிலும் டாக்டர்கள், நர்சுகளை வீடுகளுக்கு அனுப்பாமல் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா வைரசுக்கு சென்னையில் நேற்றுவரை 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.