மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 15 ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சை பெறும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில், நோயாளிகள் தப்பி ஒடிவிடாமல் இருக்க போலீஸார் மூன்று ஷிஃப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில் இதுவரை 15 நோயாளிகளுக்கு ‘கரோனா’ தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிறப்பு ‘கரோனா’ சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வார்டுக்கு வெளிப்புறத்தில் 3 ஷிஃப்ட்’ அடிப்பபடையில் போலீஸார் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே, அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவங்கை இளைஞர் தப்பியோடி காதலியைத் திருமணம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதுபோல், பல மாவட்டங்களில் நோயாளிகள் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் அச்சத்தில் தப்பியோட முயற்சித்ததாக தகவல் வந்ததையடுத்து தமிழகம் முழுவதும் ‘கரோனா’ வார்டுக்கு போலீஸ் காவல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மதுரையில் ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை முன் இன்று முதல் போலீஸார் காவலுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உள்ளே சென்று அதைப்பார்க்கவும், பிரச்சினையை சமாளிக்கவும் போலீஸார் உள்ளே செல்வதற்கும் அந்த வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களை போல் இவர்களுக்கும் பாதுகாப்பு உடை, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவர்கள் உள்ளே சென்றுபார்த்து, பிரச்சனையின் வீரியத்தைப் பொறுத்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது